திருநெல்வேலி: மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பத்துக்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருள்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் பயிலும் 36 லட்சம் பேருக்கு முதலமைச்சரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 9 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையது என கண்டறியப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் சத்தான உணவு வழங்குவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதனை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் கடுமையான பாதிப்பு, நடுத்தரமான பாதிப்பு என பிரிக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு மாத காலம் வழங்கும் வகையிலான சிறப்பு இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்து முதலமைச்சர் உத்தரவுப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
45ஆயிரம் குழந்தைகள் இதய ஓட்டை, காது கேளாதவர் உள்ளிட்டப் பாதிப்புகளுடன் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் உயர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தாய்மார்களாலேயே குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இதய குறைபாடு காது கேட்காமை போன்றவை கண்டறிய முடியாத நிலையில், அரசு கண்டறிந்து அவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கி வருகிறது.