தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2023, 6:14 PM IST

ETV Bharat / state

அமைச்சர் உதயநிதி Vs எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் - ஹாக்கி டர்ஃப் தொடர்பாக ட்விட்டரில் காரசாரம்!

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு புதிய ஹாக்கி டர்ஃப் அமைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததையடுத்து, ட்விட்டரில் இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

twitter
பாஜக

திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், கடந்த 15ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், "விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு - பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையில் இருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதை அமைப்பதற்கான செலவே மிகவும் அதிகம். எனவே புதிய ஹாக்கி டர்ஃபை அனுப்பி வைத்து, அதனை அமைக்கவும் ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அந்த பதிவில் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பழைய ஹாக்கி டர்ஃபின் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்தப் பதிவிற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டிகள், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தை அரசு புனரமைத்து வருகிறது. சர்வதேச போட்டிக்கு புதிய டர்ஃப் வாங்க உள்ளோம். மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டர்ஃப் தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக இன்னும் ஏழு ஆண்டுகள் வரை பயன்படுத்தப்படக் கூடிய நிலையில் உள்ளது. எனவே, அந்த ஹாக்கி டர்ஃப்பை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வழங்கினோம்.

புதியதுதான் வேண்டுமெனில் சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட டர்ஃபை வேறு மாவட்டத்திற்கு வழங்கத் தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பாளையங்கோட்டை அண்ணா மைதானத்துக்கு புதிய டர்ஃப் வாங்க நான்கு கோடி ரூபாய் வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாயை வழங்கினால், மீதித் தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலிக்கப்படும்" என்று பதில் அளித்திருந்தார். இந்தப் பதிவு தொடர்பாக திமுக மற்றும் பாஜகவினர் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டனர்.

இதற்கிடையில் அமைச்சர் உதயநிதிக்கு ட்விட்டரில் பதில் அளித்த எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், "சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஆசிய ஹாக்கி போட்டிகள் சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன். விளையாட்டு வீரர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் கோரிக்கை வைத்தேன். அண்ணா விளையாட்டு மைதானம், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு வருவதால், எனது தொகுதியில் இருந்து நிதி ஒதுக்கித் தர இயலாது. மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கி தரலாம் அல்லது விளையாட்டு வீரர்களின் நலன் கருதி நீங்கள் சிறப்பு நிதி ஒதுக்கி, இந்த கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவுக்கு இன்று(ஜூலை 17) ட்விட்டரில் பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு புதிய ஹாக்கி டர்ஃப் அமைக்க அண்ணன் நாகேந்திரன் முன்வைக்கும் யோசனையை கருத்தில் கொள்கிறோம். புதிய டர்ஃப் அமைக்க நிதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கலந்து ஆலோசித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் இடையே ட்விட்டரில் நடந்த இந்த காரசார விவாதம் தொடர்பாக, இருவரது ஆதரவாளர்களும் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி அறக்கட்டளையும் நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் ஒரே விலாசத்தில் எப்படி? - அண்ணாமலை கேள்வி

ABOUT THE AUTHOR

...view details