திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 20) தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, சட்டப்பேரவை உறுப்பினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வருவாய் துறையின் மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 721 பயனாளிகளுக்கு விலையில்லா பட்டாக்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் அறிவித்த திட்டமான கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக இன்டெர்நெட் டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தின் கீழ் 19 கல்லூரிகளைச் சேர்ந்த 22 ஆயிரத்து 817 மாணவ மாணவியர்களுக்கு 2 ஜிபி டேட்டா கார்டுகள், 4 ஆயிரத்து 981 பெண்களுக்கு ரூ.20.38 கோடி திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் அமைச்சர் வழங்கினார்.