திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லாதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது; 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் வழங்குவதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். குடிநீர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் கை இருப்பில் இருக்கும் குடிநீரை எவ்வாறு மக்களுக்கு பகிர்ந்து அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சரின் உத்தரவின்படி தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ளேன். நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 75 விழுக்காடு அளவிற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் வழங்கப்படுவதை ஆய்வு செய்து சீரான விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடல் நீரை குடிநீர் ஆக்குவதற்கு அதிகளவில் செலவாகிறது, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து 4800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.