தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக ஆட்சியில் புற்றுநோய்போல் வளர்ந்துள்ள முறைகேடுகள்!' - i periyasamy

அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் புற்றுநோய் போல் வளர்ந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஐ, பெரியசாமி
செய்தியாளர்களிடம் பேசிய ஐ, பெரியசாமிசெய்தியாளர்களிடம் பேசிய ஐ, பெரியசாமி

By

Published : Sep 20, 2021, 8:46 AM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளராக ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று (செப். 19) திருநெல்வேலி வந்த ஐ. பெரியசாமி செய்தியாளரைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கடந்த ஆட்சியில் கூட்டுறவுச் சங்கங்களில் நிலத்தின் அளவைத் தாண்டி, அளவுக்கு அதிகமாகப் பயிர்க்கடன் வழங்கியுள்ளனர். உதாரணமாக 25 ஆயிரம் கடன் வழங்க வேண்டிய நிலத்துக்கு, இரண்டு லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளனர்.

பல சங்கங்களில் மோசடியாக கடன் வழங்கி, அதனையே வைப்புத்தொகையாகச் செலுத்தியுள்ளனர்.

செய்தியாளரிடம் பேசிய ஐ. பெரியசாமி

1.98 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயம்

இந்த மோசடியானது பயிர்க்கடன் தள்ளுபடிக்காக நடைபெற்றுள்ளது. ஏட்டளவில் கணக்கு காண்பித்து, பயிர்க்கடன் தள்ளுபடியில் அதிக முறைகேடுகள் செய்துள்ளனர். ஐந்து சவரனுக்கு கீழ் நகைக்கடன் தள்ளுபடி வழங்க ஆறாயிரம் கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. தங்க நகைகளை அடகு வைக்காமல், போலி நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியுள்ளனர்.

குறைந்த வட்டி என்பதால், தனியார் வங்கிகளில் உள்ள நகைகளைத் திருப்பி கூட்டுறவுச் சங்கங்களில் மோசடியாக வைத்து கடன் பெற்றுள்ளனர். மோசடி செய்தவர்கள் மீது, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையைத் தவறாகப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக்கடன் வாங்கியுள்ளனர்.

தள்ளுபடி பெறுவதற்காக நகைகளை வைக்காமலேயே நகைக்கடனைப் பெற்றுள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில், நகைக்கடன் வழங்குவதற்காகப் பெறப்பட்ட 500 நகைப் பொட்டலங்களில், ஆய்வின்போது 261 பொட்டலங்களில் நகைகள் இருப்பு இல்லை. அவற்றின் மதிப்பு ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் ஆகும்.

3,999 காலிப்பணியிடங்கள் நிரப்பல்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கடன் சங்க நிர்வாகக் குழு இயக்குநர் கிருஷ்ணசாமி, பத்து போலி நகைப் பொட்டலங்களை வைத்து 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் அளவுக்கு நகைக்கடன் வாங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி எனப் பல்வேறு மாவட்டங்களில் முறைகேடாக நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

உரிய ஆய்வுக்குப் பிறகு தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் நகைக்கடன் வழங்கப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டு, தகுதியுள்ள அத்தனை பேருக்கும் கடன் தள்ளுபடி வழங்கப்படும். மொத்தம் உள்ள நான்காயிரத்து 451 கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. கடனுக்காகப் பெறப்பட்ட நகைகளை எடுத்துச் சென்றவர்கள் குறித்து கண்டறிய காவல் துறையிடம் புகார் அளித்துள்ளோம்.

அதிமுக ஆட்சியில் முறைகேடுகள் புற்றுநோய்போல் வளர்ந்துள்ளன. அதிமுகவினர் கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தவில்லை. மேலும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விரைவில் மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்படும். கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள மூன்றாயிரத்து 999 காலியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் விரைவில் நிரப்பப்படும். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில் எந்த முறைகேடும் இல்லாமல், நியாயமான முறையில் நிச்சயம் நடக்கும்” என்றார்.

இதையும் படிங்க:கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க மா. சுப்பிரமணியன் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details