திருநெல்வேலி:மாவட்டம் ராமையன்பட்டி அருகே உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் 13 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், மாணவர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜையை மீன்வளம், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை.10) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் சா.ஞானதிரவியம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், பாஜக சட்டப்பேரவை குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், விடுதிக்கான கூடுதல் கட்டடங்கள் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை அறிவியல் கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்
தமிழ்நாட்டில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். கால்நடை துறையில் காலி பணியிடங்கள் எங்கெங்கு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் காலி இடங்கள் நிரப்பப்படும். ஆடுகளுக்கு ஆட்டம்மை நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது தொகுதிக்குட்பட்ட பள்ளமடை பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவை அமைச்சரிடம் வழங்கினார். பின்னர், அமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது அட்வான்ஸ் பொன்னாடை