நெல்லை:அடைமிதிப்பான்குளத்தில் கடந்த 14ஆம் தேதி இரவு கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 நபர்களில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 - ஆவது நபர் இடிபாடுகளில் சிக்கியுள்ளார். லாரி ஓட்டுனர் ராஜேந்திரன் உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது
5ஆவது நாளாக (இன்று மே 19) தேசியப் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத்துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப்பணியை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து மீட்புப் பணிகளையும் துரிதப்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’விபத்து நடந்த குவாரியில் மீட்பு பணிகள் 5ஆவது நாளாக நடக்கிறது. ஏற்கெனவே 5ஆவது நபரை மீட்க சிறிய அளவில் வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்ட பின்பே மீட்கப்பட்டது. இந்த முறையிலேயே 6ஆவது நபரையும் மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கனிமவளத்துறை உதவி இயக்குநர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே குவாரி குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் கூறுகையில்: ’குவாரி விபத்து தொடர்பாக விசாரணை நேர்மையாக நடைபெறும் வகையில், ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே குவாரி உரிமையாளர் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அதுபோன்று உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து - வருவாய்த்துறை செயலாளர் மற்றும் கனிமவளத் துறை இயக்குனர் நேரில் ஆய்வு