திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டுவருகின்றன. மேலும் 3ஆவது, 4ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும் நடந்துவருகின்றன. இதில் கட்டுமானப் பணி, பராமரிப்பு பணியில் எல்என்டி நிறுவன ஒப்பந்தம் மூலம் வடமாநிலத் தொழிலாளர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அணு உலையில் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. அணுமின் நிலையத்தில் பணியாற்றிய வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை ஒப்பந்த நிறுவனம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே டெண்டுகள் அமைத்து தங்க வைத்தது. ஆனால் இவர்களுக்கு சரிவர உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பெயர் விவரங்களை பதிவு செய்து விரைவாக சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்த அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.