திருநெல்வேலி:திருநெல்வேலியில் மாலை முரசு நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “நாடார்களுக்குச் சொந்தமான மெர்கன்டைல் வங்கியைமீட்பதற்கு முழு முயற்சியை மேற்கொண்டவர், ராமச்சந்திர ஆதித்தனார். அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாயை சந்திப்பதற்கு, நான் ஏற்பாடு செய்து அவரோடு பணியாற்றினேன். ராமச்சந்திர ஆதித்தனாரின் பெயரும், புகழையும் என்றும் அழிக்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க:321 நாட்களாக தொடரும் போராட்டம்; அமைச்சர் அன்பில் மகேஷ் காரை முற்றுகையிட்ட கரும்பு விவசாயிகள்!
அதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், மதம் சார்ந்த முழக்கம் எழுப்பப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “விளையாட்டில் சாதி, மதம் வரக்கூடாது. விளையாட்டில் சாதியும், மதமும் தலையிடக்கூடாது, நுழையக்கூடாது. உலக யுத்தத்தின்போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுள்ளது” என்று கூறினார்.
மேலும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில், மாற்றுக் கட்சிகள் அதிமுகவோடு இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அதிமுக எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் என்றும், எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை குறித்து பேசிய அவர், “தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதில் கர்நாடகா உடும்பு பிடியாக இருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இருக்காது. கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளுமே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று இருக்கிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!