மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று (ஏப் 1) திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,"தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கோயம்புத்தூரில் உ.பி முதலமைச்சர் யோகி அதியத்நாத் பரப்புரை மேற்கொண்டபோது பாஜகவினர் கடைகளை அடைக்கச் சொல்லி பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தலின் போது எப்போதும் இல்லாதவகையில் அமைதியை குலைக்கும் விதமாக கோயம்புத்தூரில் பாஜகவினர் வன்முறையில் ஈடுபட்டது, வருத்ததை ஏற்படுத்தியதோடு கண்டனத்திற்குறியது. பாஜகவினர் தேர்தல் நேரத்திலேயே வன்முறைச் செயலில் ஈடுபடுகிறார்கள். பாஜக தமிழ்நாட்டில் வெற்றிபெற்றால் என்னவாகும் என மக்கள் சிந்திக்கவேண்டும்.
அதிமுக தனக்கு தானே குழிவெட்டிகொண்டதைப் போல பாஜகவிடம் கூட்டணி சேர்ந்துள்ளது. இது அதிமுகவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தும். தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையம் எங்கிருக்கிறது என்றே தெரியாத நிலை கடந்த தேர்தல்களில் பார்த்துள்ளோம். தேர்தல் ஆணையம் பண விநியோகத்தை கட்டுபடுத்த வேண்டும்.
நடிகர் ரஜினி காந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது பெற்றது பாராட்டுதலுக்கு உரியது. இது ரஜினிகாந்தின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. மத்திய அரசின் விருது அறிவிப்பு தேர்தல் காலத்தை மையப்படுத்தியதாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தாதா சாகேப் பால்கே விருதுக்கு நடிகர் ரஜினி காந்த் தகுதியானவர்.