நெல்லை:நெல்லை மாநகரில் உள்ள 55 வார்டுகள் உள்ளடக்கிய நெல்லை மாநகராட்சிக்கு திமுகவைச் சேர்ந்த சரவணன் மேயராக உள்ளார். இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே, மேயரை மாற்ற கோரி தொடர்ச்சியாக அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, நெல்லை மாநகர திமுகவில் நிலவும் உள்கட்சி பூசல் காரணமாகவே, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
மேயர் சரவணன் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும், மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களே வெளிப்படையாக குற்றம்சாட்டி வருகின்றனர். மேயர் கவுன்சிலர்கள் இடையே நிலவும் இந்த மோதல் போக்கினால், நெல்லை மாநகராட்சியில் பல்வேறு மக்கள் பணிகள் முடங்கி கிடப்பதாக ஒரு குற்றச்சாட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை நடந்த மன்ற கூட்டங்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் மோதல் நடவடிக்கையால் பல்வேறு கூட்டங்கள் பாதியில் முடிந்தன. மேலும், மேயரை மாற்ற கோரி துணை மேயர் ராஜூ உள்பட 30-க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் சென்னை சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மனு அளித்தனர்.
இதையடுத்து பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் கவுன்சிலர்கள் மற்றும் மேயரை அழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், அமைச்சர் பேச்சையும் மீறி தொடர்ந்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், மேயருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் மேயரை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்கி திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இதையும் படிங்க:சாதி பெயரைச் சொல்லி திட்டியதாக நெல்லை மேயர் மீது புகார்.. தொடரும் திமுக உட்கட்சி பூசல்