திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கடந்தாண்டு கரோனோ பாதிப்பு காரணமாக, கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவுக்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த 2020ஆம் ஆண்டு கல்லூரி இறுதி ஆண்டு படித்த இளங்கலை, முதுகலை மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பலருக்கு, அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள்
திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை கழகத்தின் கீழ் 4 உறுப்புக் கல்லூரிகள், 78 இணைவு கல்லூரிகள், 6 பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகின்றனர்.
அதேபோல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 23 துறைகளின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அரியர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதையடுத்து, அரியர் வைத்துள்ள மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் தேர்வு எழுதினர்.
இதில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், சில மாணவர்களுக்கு தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் அனுப்பாததாலேயே தாமதம்
ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய விடைத்தாள்கள், கல்லூரி, பல்கலைக்கழகத்திற்கு அனுப்பாத மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மனோன்மணியம் பல்கலைக்கழக பதிவாளர் மருதுகுட்டி பேசுகையில், “கல்லூரிகளை பொருத்தவரை மொத்தம் சுமார் 17 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் அரியர் தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, ப்ரவேஷனல் சான்று வழங்கப்பட்டுள்ளன.