திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊதிய உயர்வு கேட்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பயந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் மூழ்கி 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவு தினம் அனுசரிக்கப்படும்.
அந்த வகையில், இன்று 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் தாமிரபரணி ஆற்றங்கரையில் மலர் வளையம் வைத்து உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரக் காவல் துணை ஆணையர் சரவணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.