வடகிழக்கு பருவ மழையையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய அணைகள் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தொடர் கனமழை: மணிமுத்தாறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு! - மணிமுத்தாறு அணை
திருநெல்வேலி: தொடர் மழை காரணமாக மணிமுத்தாறு பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாபநாசம் அணை தற்போது தனது முழு கொள்ளளவான 143 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்பி உள்ளதால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்றிரவு (டிசம்பர் 17) தொடர் கனமழை பெய்தது. இன்று (டிசம்பர் 18) காலை நிலவரப்படி மணிமுத்தாறு பகுதியில் 10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் காரணமாக மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அணை பகுதியிலுள்ள அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தொடர் மழையால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் அங்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அருவியில் தண்ணீர் சீறிப்பாயும் காட்சி ரம்மியமாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் தற்போது 106 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் மணிமுத்தாறு அணையும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.