மதுரை:திருநெல்வேலியைச் சேர்ந்த கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சொரிமுத்து அய்யனார் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கும், காரையார் அணைக்கும் இடையே உள்ள அடர்ந்த காட்டில் முண்டந்துறை காப்புக் காட்டில் அமைந்துள்ளது.
இக்கோயிலுக்கு திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படும். ஆடி அமாவாசைக்கு 7 நாட்களுக்கு முன்பும், ஆடி அமாவாசைக்குப் பிறகு 7 நாட்களும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஆடி அமாவாசையிலிருந்து 7 நாட்களுக்குப் பிறகு ஏராளமான பக்தர்கள் கோயிலில் கூடாரங்கள் அமைத்து தங்கள் பிரார்த்தனைகளைச் செய்வார்கள்.
இந்த நிலையில், முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆகஸ்ட் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வழிபட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் 13, 14 மற்றும் 19, 20 ஆகிய நாட்களில் கோயிலில் தூய்மைப் பணி நடைபெறுவதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.