திருநெல்வெலி: திருநெல்வேலியைச் சேர்ந்த பெர்டின் ராயன் என்பவர், 'பெருமாள்புரத்தில் வினோத் குமார், பிலிப் என்பவருக்குச் சொந்தமாக இயங்கி வந்த வி.ஜே. மருத்துவமனை அரசிடம் வணிக கட்டடம் கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமீறி மருத்துவமனையின் கட்டடத்தை கட்டியுள்ளதாக' வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மருத்துவமனை கட்டடத்தைப் பூட்டி, சீல் வைப்பதுடன் கட்டடத்தை இடிக்கும்படி நெல்லை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தனர்.
மருத்துவமனையை இடிக்க வேண்டும்
இதனைத்தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள் மருத்துவமனையைக் காலி செய்யும்படி, திருநெல்வெலி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மருத்துவமனை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
மருத்துவமனையைத் தரைமட்டமாக்க உத்தரவு ஆனால், மருத்துவமனையைக் காலி செய்ய நிர்வாகம் முன்வராததால் இன்று(அக்.08) மாநகராட்சி நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வி.ஜே. மருத்துவமனையை சீல் வைக்க அங்கு சென்றனர். அப்போது போதிய கால அவகாசம் வழங்கும்படி மருத்துமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
ஆனால், நீதிமன்ற உத்தரவு என்பதால் உடனே சீல் வைக்க வேண்டும் என அலுவலர்கள் உறுதியாக தெரிவித்தனர். பின்னர் மேலப்பாளையம் மண்டல துணை ஆணையர்(பொறுப்பு) லெனின் மேற்பார்வையில் மருத்துவமனை வளாகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து கட்டடம் எந்த நேரமும் இடிக்கப்படலாம் என்று கூறப்பட்டதால், முன்னதாக முக்கிய மருத்துவக் கருவிகளை மட்டும் ஊழியர்கள் வெளியே எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் மருத்துவமனை முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
செவிலியருக்கு அதிர்ச்சி
இதற்கிடையில், வழக்கம் போல் பணிக்கு வந்த செவிலியர் மற்றும் ஊழியர்கள் மருத்துவனை சீல் வைக்கப்படுவதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களுக்கு வாழ்வளித்த மருத்துவமனைக்கு ஏற்பட்ட இந்த நிலையை தாங்க முடியாமலும் பணிபுரிந்த மருத்துவமனையை விட்டுப் பிரிய முடியாமலும், சில பெண் செவிலியர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மேலும் திடீரென மருத்துவமனைப் பூட்டி சீல் வைக்கப்பட்டதால், சிகிச்சையில் இருந்த நோயாளிகள் பெரும் சிரமப்பட்டனர். பிறகு, அவர்களை உறவினர்கள் வேறு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்கள் இதுபோன்று அரசை ஏமாற்றி, கட்டடம் கட்டியிருப்பதும், அதை உடனே கவனிக்காமல் சட்டப்போராட்டத்துக்குப் பிறகே, நடவடிக்கை எடுத்த அலுவலர்களின் செயலும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வரலாறு திரும்பியது.. மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா!