திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி ஊர்வலம் சென்றனர். அப்போது காவல் துறையினர் நடத்திய தாக்குதலையடுத்து தாமிரபரணி ஆற்றங்கரையில் மூழ்கி 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுக்கு ஆண்டுதோறும் ஜூலை 23ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. அன்றைய தினம் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர். அந்த வகையில் இன்று மாஞ்சோலை தொழிலாளர்களின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் காலைமுதல் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.