திருநெல்வேலி:நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்த இடங்கள், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட பகுதிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.23) ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு உடனிருந்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் ஆறு முதல் ஏழு அடி உயரத்திற்கு தண்ணீர் வந்த நிலையில், அங்குள்ள கேத் லேப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனை சரி செய்ய ஒரு மாத கால ஆகும். அதுவரை, திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். வெள்ளம் பாதித்த தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 2 ஆயிரத்து 682 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 95 ஆயிரத்து 127 நபர்களுக்கு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 764 பேர் காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
2,565 நபர்களுக்கு சளி உள்ளிட்ட நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாமை பல நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவை தவிர, 93 நடமாடும் மருத்துவ முகாம்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களிலும் சேர்த்து 190 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
இதில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட நான்கு மருத்துவ ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். வெள்ளம் அதிகம் பாதித்த பகுதிகளான ஏரல், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டிணம் ஆகிய இடங்களில் அப்பல்லோ மீனாட்சி மிஷன் உள்ளிட்ட 17 தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து மெகா மருத்துவ முகாம் நாளை (டிச.23) காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது.