திருநெல்வேலி: ஆறாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகத் திருவிழாவிற்கான லோகோ வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஆட்சியர் கார்த்திகேயன் பயிற்சி உதவி ஆட்சியர் கோகுல் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு புத்தக திருவிழாவுக்கு ஆதினி என்ற பெயரிடப்பட்ட இருவாச்சி பறவை சின்ன இலச்சினையை வெளியிட்டனர். தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கான அழைப்பிதழை ஆட்சியர் வெளியிட எழுத்தாளர் நாறும்பூநாதன் பெற்றுக் கொண்டார். பின்னர் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகன சேவையை ஆட்சியர் கார்த்திகேயன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு முதல் முறையாக அரசாணை வெளியிடப்பட்டு புத்தக திருவிழா நடக்கிறது. இதில் பல புத்தக நிறுவனங்கள் மற்றும் பிற துறைகள் சார்பில் 110 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. அனைவருக்குமான பன்முகத்தன்மை கொண்ட புத்தக திருவிழா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு புத்தக திருவிழாவை நடத்த பயிற்சி ஆட்சியர் கோகுல் பொறுப்பேற்றுள்ளார். நெல்லை பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு அரங்குகள் அமைய உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் அடர்ந்த மலைக்காடுகளில் காணப்படும் இருவாச்சி பறவைக்கு ஆதினி என்று பெயரிடப்பட்டு லோகோவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகம் படிக்க மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகள், ஆதரவற்ற இல்லங்கள் மற்றும் சிறை நூலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடையாக வழங்க புத்தக பாலம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட எழுத்தாளர் குழு மூலம் நன்கொடையாக புத்தகங்கள் வழங்கலாம்.