தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் வேட்புமனு பரிசீலனை தொடக்கம் - உள்ளாட்சி தேர்தல்

திருநெல்வேலியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டுவருகிறது.

நெல்லையில் வேட்புமனு பரிசீலனை தொடக்கம்
நெல்லையில் வேட்புமனு பரிசீலனை தொடக்கம்

By

Published : Sep 23, 2021, 2:06 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்காக செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று (செப்டம்பர் 22) மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி நாளான நேற்று வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல்செய்தனர்.

2069 பதவிகளுக்குப் போட்டி

அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட ஒன்பது உள்ளாட்சி ஒன்றியங்களில் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் இரண்டாயிரத்து 69 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தப் பதவிகளுக்குப் போட்டியிட ஆறாயிரத்து 871 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.

வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை

இவர்களின் வேட்புமனு மீதான பரிசீலனை இன்று (செப்.23) காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. வேட்பாளர்கள் தங்கள் மனுக்கள் மீதான பரிசீலனையில் நேரில் பங்கேற்றுள்ளனர்.

வேட்புமனுவில் கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையானவையா, ஆவணங்களின் அடிப்படையில் விவரங்கள் சரியாக குறிப்பிட்டுள்ளனரா என்பது குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

குறிப்பாக பெயர் விவரங்கள் துல்லியமாகக் கண்காணிக்கப்படுகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர், முகவரி விவரங்களும் அடையாள அட்டையில் உள்ள பெயர், முகவரி விவரங்களும் ஒன்றுபோல் உள்ளனவா என அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின் வேட்புமனு குறித்து வேட்பாளர்களிடம் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

வேட்புமனுவைத் திரும்பப் பெற நாளை மறுதினம் (செப்.25) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வேட்பாளர்களின் வேட்புமனு விவரத்தை அறிந்துகொள்ள அவர்களது ஆதரவாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குவிந்துவருகின்றனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் - மாற்றத்துக்கான ஒரு நல்ல வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details