திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில் நயினார் குளம் காய்கறி மார்க்கெட் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய மார்க்கெட் என்று அழைக்கப்படும் இங்கு நாள்தோறும் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.
அதேபோல் உள் மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கே கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி நயினார் குளம் மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமைதூக்கும் தொழிலாளர்கள் தங்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த மார்க்கெட் நிர்வாகிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குறிப்பிட்ட தொகை போனஸ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.