தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் தனது உறவினர் அன்னாவி பெயரில் லோடு ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையில் தனியார் நிதி நிறுவனத்தில் தனது ஆட்டோ ஆவணங்களை வைத்து கடனும் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாகக் கடன் தவணை தொகையைக் கட்டாததால், இரண்டு தினங்களுக்கு முன்பாக அவரின் லோடு ஆட்டோவை தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நிதி நிறுவனத்திற்குச் சென்ற பழனிவேலை, அங்கிருந்த மேலாளர், ஊழியர்கள் அவமரியாதையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பழனிவேல், தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். 40 விழுக்காடு எரிந்த நிலையில் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள் தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்த வந்த காவல் துறையினர், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிதி நிறுவன ஊழியர்களான பாலசுப்பிரமணியன், மகாராஜன் ஆகிய இருவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.