ஊரடங்கு பிறப்பித்த தொடக்க நாள்களில், சைக்கிளில் வீதிகளை சுற்றுவதுதான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தது என்று புன்னகை தவழக் கூறும், கண்ணனுக்கு கடந்த பத்து நாள்களாக கையிருப்பு ஏதும் இல்லை. இதனால், தன் ஐந்துக்கு ஐந்து கடையில் மீண்டும் செருப்பு பழுது பார்க்கும் தொழில் செய்ய வந்திருப்பதாகத் தெரிவிக்கும் அவருக்கு, ஊரடங்கு என்னென்ன நெருக்கடிகளைக் கொடுத்தது.
செருப்பு தைக்கும் தொழிலாளி கண்ணன் “பாளையங்கோட்டையில் செருப்புகளை பழுது பார்த்து காலம் தள்ளி வந்தேன். திடீரென பிறப்பித்த ஊரடங்கு, என் இயல்பு வாழ்க்கையை மாற்றியது. மக்கள் நடமாடினால்தான், எனக்கு தொழில் நடக்கும். மக்களே முடங்கிய பிறகு யாருக்காக, செருப்பு தைக்க, வெறுமனே சைக்கிளில் சுற்றித் திரிந்தேன். 40 வருட காலத்தில், இப்படி தொழிலின்றி சுற்றியது, இதுவே முதல்முறை” என கடந்த கால நினைவுகளுக்குள் மூழ்குகிறார், கண்ணன்.
ஊரடங்கால் பாதித்த செருப்பு தொழிலாளியின் கதை! ’இன்னும் ஒரு தடவை தைய்ச்சி போட்டுக்கோயேன்’ என இறைஞ்சும் தாய்மார்களும், இதுதான் கடைசி, அடுத்தவாட்டி புதுசு வாங்கித் தரணும் என பொறுத்துக் கொள்ளும் குழந்தைகளும், விளிம்பு நிலை மக்களும்தான், செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் பிரதான வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். இந்த செருப்பு பழுதானால் என்ன? வேறொன்றை வாங்கிக் கொள்ளலாம் என மக்கள் நினைக்காதவரைதான், செருப்பு தைக்கும் தொழிலாளிகளுக்கு வாழ்க்கை.
இந்நிலையில், ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்படும் பாளையங்கோட்டை கண்ணன் கூறுகையில், “என் மனைவி தவறிவிட்டார். இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். தற்போது, மகனுடன் வசித்துவருகிறேன். எனக்கு கிடைக்கும் 350 ரூபாய் கூலியில்தான் அவர்களை வளர்த்தேன். அந்த அடிப்படை கூலிக்கும் இப்போது வழியில்லை. 15 வயதில் இந்த தொழிலில், கை வைத்தேன், இப்படியொரு நெருக்கடியை சந்தித்ததில்லை. தெருக்களில் மக்கள் அரவமில்லாமல், வெறுமையாகயிருக்கிறது. ஒரு சில செருப்புகளைக் கூட தைக்க வழியில்லை.
செருப்பு தைக்கும் தொழிலாளி கண்ணன் நலவாரியத்தில் பதியாததால், உதவித் தொகையும் பெறமுடியவில்லை. நியாயவிலைக் கடை அரிசியும், ஆயிரம் ரூபாயும்தான் கடந்த 40 நாள்களை கடக்க உதவியது. இப்போது, வேறு வழியில்லாமல், தொழிலுக்கு வந்துவிட்டேன். ஒன்றிரண்டு செருப்புகளைத் தைத்து, வயிற்றைக் கழுவலாம் என்று வீதிக்கு வந்தால், அதற்கும்கூட வழியில்லை. அரசுதான் என் நம்பிக்கை. ஏதாவது உதவி கிடைக்கும் என காத்திருக்கிறேன்” என்றார்.
மக்கள் நடமாட்டம் இருக்கும்போதே, கண்ணன் போன்ற சாலையோர தொழிலாளிகள் வறுமைக் கோட்டுக்கு கீழேதான் வாழ்ந்துவந்தார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக, மேலும் ஒடுங்கி தவிக்கிறார்கள். அவர்களை அரசு தாமாக இனம்கண்டு அரவணைப்பதே, மானுட அறமாகயிருக்கும். செருப்பு தைக்காமல் நாள்களை கடத்தலாம்...பசி இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியாது என்பதே நிதர்சனம்
இதையும் படிங்க:'உலகத்தைத் தனதாக்கும் குறுகிய மனப்பான்மையை மனிதன் கைவிட வேண்டும்'