தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்.. மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைக்கான உரிமம் ரத்து! - நெல்லை செய்திகள்

Child dead on improper treatment: நெல்லையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல சிகிச்சைக்கான உரிமம் ரத்து
தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 12:32 PM IST

திருநெல்வேலி:நெல்லையில் தவறான சிகிச்சையால் ஆறு வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைக்கான உரிமத்தை ரத்து செய்து, நெல்லை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் லதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி கண்மணி குடியிருப்பைச் சேர்ந்த முருகேசன் என்பவரது ஆறு வயது மகள் ஷிவானி. இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், பரப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவரான சிகிச்சையால் சிறுமி உயிரிழந்ததாக அவரது தந்தை புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், விஜயநாராயணம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், தவறான சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: சுங்கத்துறை அதிகாரியிடம் பெண் பயணி வாக்குவாதம்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

மேலும் மருத்துவமனையின் அலட்சியப் போக்கை கண்டித்து, பரப்பாடி பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதையடுத்து, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் லதா தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட பரப்பாடி தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை குறைபாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, அந்த மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை அளிப்பதற்கு தடை விதித்தும், அதற்கான உரிமத்தை ரத்து செய்தும் நெல்லை மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் லதா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணனூர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!

ABOUT THE AUTHOR

...view details