நாடு முழுவதும் கரோனோ ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனவே அரசிடம் நிவாரணம் கேட்டு பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டம் நடைபெறுவது தொடர்கிறது.
இந்நிலையில், கரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு மாதம் 15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி திருநெல்வேலியில் வழக்குரைஞர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
அதன்படி, தூத்துக்குடி சாலையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு கையில் பதாகைகளை ஏந்தியபடி வழக்குரைஞர்கள் சாலையில் நின்று போராடினர். அப்போது பேசிய வழக்கறிஞர்கள், "கரோனாவால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்குரைஞர்களும் வருமானம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே வழக்குரைஞர்களுக்கு நீதிமன்றம் ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். கரோனோ ஊரடங்கால் தொலைக்காட்சி வாயிலாகத் தற்போது நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இதை நிரந்தரமாக்க முயற்சி நடக்கிறது. அப்படி நடந்தால் சாட்சிகளை விசாரிப்பது உள்பட பல விஷயங்களில் குழப்பம் ஏற்படும், எனவே அந்த முடிவைக் கைவிட வேண்டும்.
அதேபோல் ஏற்கனவே பிறப்பு, இறப்புப் பதிவு வழக்குகளை நீதிமன்ற வரம்புக்கு வெளியே கொண்டு சென்றுவிட்டார்கள். தற்போது காசோலை வழக்குகளையும் நீதிமன்ற வரம்புக்கு அப்பால் கொண்டுசெல்லும் முயற்சி நடக்கிறது. இதனால் மக்களுக்கு நீதி கிடைக்காது. எனவே இவற்றைக் கண்டித்துதான் போராட்டம் நடத்துகிறோம்" என்றார்.