தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறை அலுவலர்கள் தாக்கி யாரும் உயிரிழக்கவில்லை - வழக்கறிஞருக்கு சிறை நிர்வாகம் பதில் - RT Act

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளில் எய்ட்ஸ், கரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களால் 133 கைதிகள் உயிரிழந்திருப்பதாகவும், சிறை அலுவலர்கள் தாக்கியதாக யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

வழக்கறிஞருக்கு சிறை நிர்வாகம் பதில்
வழக்கறிஞருக்கு சிறை நிர்வாகம் பதில்

By

Published : Aug 5, 2021, 10:54 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழக்கும் சம்பவங்கள் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.

சிறையில் சாதிய மோதல்

அதேசமயம் சிறை அலுவலர்கள் தாக்கப்படுவதன் மூலம் பல கைதிகள் உயிரிழப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக பாளையங்கோட்டை சிறையில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடைபெறுவதால் அதன் காரணமாகவும் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் வாகைக் குளத்தைச் சேர்ந்த கைதி முத்து மனோ (24) என்பவர் சாதி மோதல் காரணமாக சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

வழக்கறிஞரின் 5 கேள்விகள்

இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை சிறையில் எத்தனை கைதிகள் உயிரிழந்துள்ளனர்? மேற்கண்ட ஆண்டுகளில் தற்கொலையில் ஈடுபட்ட கைதிகளின் விவரங்கள் என்ன? கைதி ஒருவர் சோப்பாயில் குடித்து தற்கொலை முயற்சி செய்த போது அவர் கையில் விலங்கிட்டு கட்டிப்போட்டு துன்புறுத்திய சிறை அலுவலர்களின் பெயர் மற்றும் பணிப் பொறுப்பு விவரங்கள் என்னென்ன? என்பது உள்பட ஐந்து கேள்விகளுக்கு தகவல் கேட்டு மனு அளித்திருந்தார்.

சிறை நிர்வாகம் பதில் மனு

வழக்கறிஞர் பிரம்மாவின் மனுவுக்கு தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பொது உதவி தகவல் அலுவலர் பதில் மனு அளித்துள்ளார். அதில் கடந்த 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மொத்தம் 133 கைதிகள் பல்வேறு நோய்களால் உயிரிழந்துள்ளதாக பெயர் மற்றும் உயிரிழந்த இடத்தின் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் எய்ட்ஸ் மற்றும் கரோனோ உள்பட கொடிய நோய்களாலும் கைதிகள் இறந்திருப்பதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

கைதிகள் துன்புறுத்தப்படவில்லை

மேலும் இதில் 90% பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தும் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்திருப்பதாக தகவல் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கடந்த 03.11.2020 அன்று விசாரணைக் கைதியான கருத்தப்பாண்டி என்பவர் சோப்பாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறைப் பணியாளர்கள் அவரை துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் 2000 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் சிறை அலுவலர்களால் தாக்கப்பட்டு சிறைவாசிகள் இறந்ததாக பதிவேடுகளில் குறிப்புகள் எதுவும் இல்லை. தற்கொலை முயற்சி செய்த சிறைவாசிகள் விவரம் தொடர்பாக பதிவேடுகள் எதுவும் தனியாகப் பராமரிக்கப்படவில்லை.

வழக்கறிஞர் குற்றச்சாட்டு

இந்த ஆண்டுகளில் சிறைவாசிகள் தற்கொலைக்கு முயற்சி செய்வதை தடுக்க தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. சிறைவாசிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு மன நல அலுவலர் மற்றும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த தகவலில் பல உண்மைச் சம்பவங்கள் மறைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் பலர் சிறை அலுவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாகவும் வழக்கறிஞர் பிரம்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி சிறுமி விவகாரம்- ராகுல் காந்தி மீது புகார்!

ABOUT THE AUTHOR

...view details