திருநெல்வேலி:திருநெல்வேலிபுதிய பேருந்து நிலையத்திலிருந்து, தூத்துக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் நேற்று (ஆக.11) ஒருவர் பயணித்திருக்கிறார். அவர் தனது மடிக்கணினி, உடமைகள் ஆகியவற்றை இருக்கைக்கு மேற்பகுதியில் வைத்து விட்டு அமர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் அவரது பின் இருக்கையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்போது இருக்கையின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பைகளை அடையாளம் தெரியாத நபர் நோட்டமிட்டிருக்கிறார். சிறிது நேரத்தில் மடிக்கணினி பையை மட்டும் திருடிக் கொண்டு, அடையாளம் தெரியாத நபர் பேருந்தை விட்டு இறங்கி சென்றிருக்கிறார்.
மடிக்கணினி திருடுவது தொடர்பான காணொலி சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்
பின்னர் உடைமைக்குச் சொந்தக்காரர் தூத்துக்குடியில் இறங்கும்போது, தனது மடிக்கணினி பை திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அங்குள்ள புறக்காவல் நிலையத்தில், திருட்டு குறித்து புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மடிக்கணினி பையை திருடிச் செல்வது தெரிய வந்தது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மடிக்கணினியைத் திருடிய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், இந்த திருட்டுச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
இதையும் படிங்க:காதலித்து ஏமாற்றிய ராணுவ வீரருக்கு நீதிமன்ற காவல்