தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால், தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி பேனர்கள், அரசியல் தலைவர்களின் சிலைகள் துணியால் மறைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ரயில் நிலையம் முன்பு உள்ள பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவ சிலையும் துணியால் மூடப்பட்டிருந்தது.
அம்பேத்கர், பசும்பொன் தேவர் ஆகியோரின் சிலைகள் திறந்து இருக்கும் போது, காமராஜர் சிலையை மட்டும் மூடப்பட்டதற்கு பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கண்டனம் தெரிவித்தார் .
செய்தியாளர்களை சந்தித்த ஹரிநாடார் திருநெல்வேலி மாவட்ட துணை ஆட்சியரை சந்தித்து காமராஜர் சிலையை திறக்க வேண்டும் என ஹரி நாடார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது, ரயில் நிலையம் முன்பு இருந்த காமராஜர் சிலை தேர்தல் காரணமாக மூடப்பட்டுள்ளது. அதை திறக்கவேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு அவர் தேர்தல் நேரத்தில் இது போன்ற சிலைகள் மூடப்படுவது வழக்கம் என கூறினார்.
அதேசமயம் கலைஞர் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தினமும் அங்கு சென்று வருகிறார். பசும்பொன் தேவர், அம்பேத்கர் சிலைகள் மூடப்படாமல் உள்ளது. இப்படி இருக்கும் போது காமராஜர் சிலை மட்டும் துணியால் மூடப்பட்டுள்ளது முறை அல்ல. எனவே சிலையை உடனே திறக்கவேண்டும் என அலுவலரிடம் தெரிவித்தேன். அதற்கு அவரும் இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதனையடுத்து ஹரிநாடார் அளித்த மனுவை ஏற்ற அலுவலர்கள், ரயில் நிலையம் முன்பு மூடியிருந்த காமராஜர் சிலையை திறந்தனர். இதன்பின் அங்கு தனது ஆதராவளர்களுடன் சென்ற ஹரி நாடார் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இது எங்களுக்கு கிடைத்த வெற்றி. தென்காசி மாவட்டம் கடங்கநேரியில் புதிதாக காமராஜர் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கை மனு அளித்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.