விஏஓ வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம்: கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல்! திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ் (53). இவர் வழக்கம் போல் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது நேற்று (ஏப்.25) பிற்பகலில் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், அவரை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இந்த கொடூரத் தாக்குதலினால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லூர்து பிரான்சிஸை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்தே ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்பகுதியில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து லூர்து பிரான்சிஸ் கண்டித்ததாகவும், மணல் கொள்ளை குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், இதனால் ராமசுப்பு என்பவரும் மேலும் ஒருவரும் இணைந்து விஏஓவை படுகொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் லூர்து பிரான்சிஸ் கொலையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடலை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கினார்.
முன்னதாக கனிமொழி எம்பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "மிகச் சிறப்பாக தன்னுடைய பணியை செய்யக்கூடிய அதிகாரிக்கு நேர்த்த சம்பவம் மிகுந்த வருத்தத்தையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார். விரைவில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள். காவல்துறை அதிகாரிகளும் நடவடிக்கை குறித்து உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சரியான தண்டனை தரப்படும்" என கூறினார்.
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மகளுக்கு அடுத்த வாரம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் லூர்து பிரான்சிஸ் மகன் நேர்மையாக இருந்த என் அப்பாவை இப்படி கொன்று விட்டார்களே என்று கதறி அழுதது காண்போரையும் கலங்கச் செய்தது. கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் புகுந்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: TN VAO hacked: பாதுகாப்புக்கு துப்பாக்கி வேண்டும்.. கிராம நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி