திமுக தன்னை கைது செய்து பிரபலபடுத்தியது என கனல் கண்ணன் பேச்சு திருநெல்வேலி:திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் சமீப காலமாக அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை பொது மேடைகளில் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்து மதம் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசி வருகிறார். இது போன்ற நிலையில் கனல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார்.
அதில், கிறிஸ்தவ மத போதகர் அணியின் உடையுடன் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன் நடனமாடும் வீடியோ அதன் பின்னணியில் தமிழ்த் திரைப்படப் பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், அதில் வெளிநாட்டு மத கலாச்சாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இது சம்பந்தமாக திமுக ஐ.டி பிரிவைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் அளித்த புகாரின் பேரில் கடந்த 10ஆம் தேதி கனல் கண்ணன், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து தனக்கு ஜாமீன் கேட்டுக் கனல் கண்ணன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று முன்தினம் (ஜூலை 18) ஆம் தேதி கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து பாளையங்கோட்டை சிறையிலிருந்து நேற்று (ஜூலை 19) ஆம் தேதி காலை கனல் கண்ணன் வெளியே வந்தார். சிறைக்கு வெளியே வந்த அவருக்கு இந்து முன்னணி அமைப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன், திமுக அரசு தன்னை கைது செய்து, மிகவும் பிரபலப்படுத்தி விட்டார்கள் எனக் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ்த் திரைப்படங்களில் சண்டைப்பயிற்சியாளராக பணிபுரிந்தவர். இவர் தமிழில் பல படங்களுக்குச் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர். 1989 முதல் 2023 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமாகி சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியவர். மேலும், தமிழில் நடிகர் ரஜினிகாந்த் கூட சிவாஜி படத்தில் இவர் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமாகி சண்டை கலந்த நகைச்சுவையை எவராலும் மறக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இறுதியாக நடிகர் விஷாலுடன் இனைந்து மார்க் ஆண்டனி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Samantha: ஈரோடு பண்ணாரி கோயிலில் தரிசனம் செய்த சமந்தா