திருநெல்வேலி:களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு மங்கம்மாள் சாலையில், பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை காவல் துறையினர் ஒரு கொள்ளை வழக்குத் தொடர்பாக நேற்று (மார்ச் 16) பிடிக்கச் சென்றனர். அப்போது நீராவி முருகன், உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களை ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா, தனது துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த நான்கு காவலர்களும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நீராவி முருகனின் உடலும் உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக களக்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நாங்குநேரி நீதிபதி ராம் கிஷோர் இன்று (மார்ச் 17) நீராவி முருகன் உடலை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவர் நீராவி முருகனின் சகோதரி செல்ல மாரியம்மாள், அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நீராவி முருகனின் உடல் உடற்கூராய்வு செய்யப்படயிருக்கிறது. மேலும் இதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யவுள்ளனர். பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட மூன்று காவலர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார், நீதிபதி.
நெல்லையில் என்கவுன்ட்டர் செய்த ரவுடி உடலை ஆய்வு செய்த நீதிபதி இந்தச் சம்பவம் எப்படி நடந்தது எதற்காகத் துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டார்கள் எனவும்; விசாரணை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், என்கவுன்ட்டரில் உயிரிழந்த நீராவி முருகன் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்ட இடத்தையும் மேஜிஸ்ட்ரேட்(நீதிபதி) நேரடியாகச் சென்று ஆய்வு செய்யவுள்ளார்.
இதையும் படிங்க:ஆடம்பர கொள்ளையனின் ஆட்டத்தை முடித்த காவல் துறை - யார் இந்த நீராவி முருகன்?