திருநெல்வேலி: தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மின்கட்டணம், சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் தென்காசி தொகுதியில் நான் போட்டியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் சொல்ல முடியும். அப்போது அரசியல் சூழ்நிலை குறித்து யாருடன் கூட்டணி வைப்பது என்று முடிவெடுப்போம். எங்கள் கொள்கைப்படி பட்டியலின வெளியேற்றம் குறித்து வாக்குறுதி கொடுக்கும் கட்சிக்கு தேர்தலில் ஆதரவளிப்போம்.
தேவேந்திர குல வேளாளர் அரசாணை எங்களுக்கு கிடைத்துள்ளது, தொடர்ந்து பட்டியல் இனத்தில் இருந்து எங்களை வெளியேற்ற கோரி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அடுத்த ஆண்டு ஜூலை 2ம் தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. அதே கோரிக்கையை வலியுறுத்தி 2023 அக்டோபர் ஒன்பதாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடைபயணம் மேற்கொள்கிறேன்.
மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவோம். குறிப்பாக முட்டை விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள், சொல்வதை திமுக செய்ய மாட்டார்கள் அதுதான் திமுக. அவர்களின் வாக்குறுதியை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர்.
இப்படி ஒரு அமைச்சர்கள் கிடைத்தால் முதல்வரால் எப்படி தூங்க முடியும்? ஜான் பாண்டியன் பேட்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்க்கிறோம். இது தவறு எல்லோருமே பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளனர். ஜாதி வாரியாக மக்களின் நிலையை கணக்கெடுத்தால் தான் விகிதாச்சாரம் வழங்க முடியும். தென் மாவட்டங்களில் ஜாதி கொலையை தடுக்க தென் மண்டல ஐஜி சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக கூலிப்படை தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
தமிழக முழுவதும் இந்த நடவடிக்கை தொடர வேண்டும். சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு மற்றும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்களில் காவலர்கள் பலி ஆக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் உத்தரவு பிறப்பித்த உயர் அதிகாரிகள் யார் என்று இதுவரை சொல்லவில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பான கமிஷன் அறிக்கை கண் துடைப்பு தான்.
கோவையில் குண்டு வெடித்ததை சிலிண்டர் வெடித்ததாக சொன்னார்கள். இந்த வழக்கில் மத்திய அரசு வந்து விசாரிக்கிறது, இது தமிழகத்திற்கு அசிங்கம். தமிழகத்தில் ஆளுங்கட்சியில் ஒரு அமைச்சரே மற்றொரு அமைச்சரை குறை சொல்கிறார் என்றால் உள் கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதுபோன்று அமைச்சர்கள் செயல்பட்டால் முதல்வரால் எப்படி தூங்க முடியும்.
திமுக அமைச்சர்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஏழை மக்கள் அமைச்சர்களை சந்தித்து மனு அளிக்க முடியவில்லை. அமைச்சர்கள் நான் பெரியவனா நீ பெரியவனா என்று ஈகோ பார்க்கின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது தேர்வை ரத்து செய்வதாக திமுக கூறியது பொய் தான். தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது அவற்றை தடுக்க காவல் நிலையத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் காவலர்களை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட்