திருநெல்வேலி மாவட்டம், மகாராஜா நகருக்கு அடுத்த வேலவர் காலனியைச் சேர்ந்தவர் முருகப்பெருமாள். இவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மேரி. இவர் பாளையங்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சத்துணவு பிரிவு துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றினார்.
தொடர் விடுமுறையை அடுத்து இவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வீட்டை பூட்டிவிட்டு வேளாங்கண்ணி சென்றனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன. இதனைக்கண்ட முருகப்பெருமாள் அதிர்ச்சி அடைந்து ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.