தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2022, 8:51 AM IST

ETV Bharat / state

ரூ.5 லட்சம் கொடுத்தா ரூ.5 கோடி வரும்... நகை வியாபாரம் டூ கான்கிரீட் கூலி வேலை... சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் சம்பவம்...

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் நகை வியாபாரி உள்பட பலரை ஏமாற்றிய கும்பல் குறித்து நகை வியாபாரி புகார் அளித்துள்ளார்.

நகை வியாபாரம் டூ கான்கிரீட் கூலி வேலை.. சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் செக் வைத்த கும்பல்
நகை வியாபாரம் டூ கான்கிரீட் கூலி வேலை.. சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் செக் வைத்த கும்பல்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விளை சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் நகை வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தில் இருக்கும் நாக தேவதை சித்தர் பீடம் மற்றும் அறக்கட்டளையை நடத்திவரும் இசக்கிமுத்து என்பவருடன் நாகராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, “மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ.பி.ராஜ் என்பவருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உள்ளது. அவரிடம் இரிடியம் என்னும் விலை மதிக்க முடியாத பொருள் உள்ளது. அந்த பொருளை விற்று அதில் வரும் 2,000 கோடி ரூபாய் பணத்தை எனது அறக்கட்டளையில் செலுத்த உள்ளேன்” என நாகராஜனிடம் இசக்கிமுத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வாறு அறக்கட்டளைக்கு வரும் பணத்தை நாகராஜனை போன்ற பலருக்கு குறைந்த வட்டியில்லா கடனாக வழங்கப்பட உள்ளதாகவும் கூறி, அவ்வாறு வழங்க வேண்டுமானால் தங்களின் நாக தேவதை சித்தர் பீட அறக்கட்டளையில் உறுப்பினராக சேர்ந்து பணம் செலுத்த வேண்டும் என இசக்கிமுத்து கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நாகராஜனிடம், ‘நீங்கள் ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கினால், மிக விரைவில் ரூ. 5 கோடியாக திருப்பி வழங்கப்படும்’ எனவும் கூறியுள்ளார். இதனை நம்பிய நகை வியாபாரி நாகராஜன் உள்பட பலரும் தங்களது தகுதிக்கு ஏற்றார்போல் வீடு மற்றும் நகைகளை விற்று இசக்கிமுத்து தரப்பிடம் கொடுத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட காலம் முடிந்தபோது நாகராஜன் பணம் கேட்டதற்கு, ‘கூடுதலாக பணம் வருகிற மாதிரி இருக்கிறது. அதனால் அவசரப்படாமல் சற்று பொறுங்கள்’ என இசக்கிமுத்து கூறி வந்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் பணம் கேட்கும் போதெல்லாம் இதே பதிலையே இசக்கிமுத்து கூறி வந்துள்ளார்.

இதனிடையே நாகராஜன் தொழிலில் நஷ்டமாகி, கடனுக்கு மேல் கடன் அதிகமாகி, ஒரு கட்டத்தில் ஊருக்குள் இருக்க முடியாமல் தனது மனைவியின் நகைகள் மற்றும் தனது வீட்டினையும் விற்றுவிட்டு ஊரை காலி செய்து, காரியாண்டி அருகில் உள்ள திருமலாபுரத்திற்கு சென்று விட்டார்.

தொழில் நஷ்டம், முதலீட்டில் ஏமாற்றம் என பணத்தை இழந்த நாகராஜன், தற்போது கான்கிரீட் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில், தான் பணத்தை இழந்தது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நாகராஜன் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.

அப்போது மதுரையைச் சேர்ந்த பாஸ்டர் ஏ.பி.ராஜன், நாக தேவதை சித்தர் அறக்கட்டளை நிர்வாகி இசக்கிமுத்து மற்றும் இசக்கிமுத்துவின் மனைவி ஆகியோரிடம் நாகராஜன் தொலைபேசியில் பேசிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளையும் புகாருடன் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் தனது புகார் குறித்து தமிழ்நாடு அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தந்து தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும், மேற்கண்ட சதிகார கும்பல்களின் தொலைபேசி எண்களையும், வங்கி கணக்குகளையும் முறையாக ஆய்வு செய்து விசாரித்தால் தன்னைப்போல் ஏமாந்த பல பேர்களின் உண்மை நிலை வெளிச்சத்துக்கு வரும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இந்த ஏமாந்தவர்களின் பட்டியலில் அரசு ஊழியர்கள், தையல் கடைக்காரர், விவசாயி, வியாபாரி, பெண்கள் என பல தரப்பினர் உள்ளதாகவும் நாகராஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் குறைந்த விலையில் வாட்ச், லேப்டாப் தருவதாகக்கூறி நூதனத்திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details