திருநெல்வேலி: சந்திராயன்-3 வெற்றியை தொடர்ந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப ஆயத்தமாக ககன்யான் விண்வெளி திட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழுமையாக ஈட்டுப்பட்டுள்ளனர். இதற்காக நெல்லையில் நடைபெற்ற இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் கீழ் அனுப்பபட உள்ள செயற்கைக்கோளுக்கு பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் உற்பத்தி செய்யப்பட்டு பலகட்டமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஆதித்யா-எல்1: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அப்டேட்!
சந்திராயன்-3 வெற்றியை தொடர்ந்து ககன்யான் திட்டத்தின் கீழ் மூன்று மனிதர்களை ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ தூரம் மனிதர்கள் விண்வெளியில் பயணிக்க வைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர். ஆராய்ச்சிக்கு பின் மூன்று பேரும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வரும் பணிகளையும் இஸ்ரோ தீவிரமாக செய்து வருகிறது.
அதன் முன்னோட்டமாக ககன்யான் திட்டத்தின் கீழ் ஆளில்லா ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ தயாராகி வருகிறது. மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதன் முன்னோட்டமாக ஆளில்லா ராக்கெட்டில் ரோபோக்களை அனுப்பி சோதனை செய்யவும் இஸ்ரோ பெரும் திட்டத்தை வகுத்துள்ளது. எனவே, ககன்யான் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்திற்கான சி.இ-20 என்ற கிரையோஜெனிக் இஞ்சின் சோதனை இன்று (ஆக.30) நடைபெற்றது. 720 வினாடிகள் நடைபெற்ற இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ககன்யான் விண்வெளி திட்டத்தில் எல்.எம்.வி 3 ராக்கெட்டின் மேல் நிலைக்கு சக்தி அளிக்கும் வகையில் சி.இ-20 கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்த வெற்றி ககன்யான் திட்டத்தின் அடுத்த மைல் கல்லாக பார்க்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.
சந்திரயான் -3 வெற்றிக்கு பிறகு உலக நாடுகள் விண்வெளி ஆராய்ச்சி குறித்த இந்தியாவின் வளர்ச்சியை உற்றுநோக்கி வரும் நிலையில் ககன்யான் திட்டத்தின் அடுத்தக்கட்ட பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Smile Please.. பிரக்யான் ரோவர் எடுத்த விக்ரம் லேண்டர் கிளிக்!