திருநெல்வேலி: பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவர் மிலிட்டரி லைன் சர்ச் அருகில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அப்துல் காதரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ் குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சாத்தான்குளம் கொலை வழக்கு ஒன்றில் அப்துல் காதருக்குத் தொடர்பு இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் நெல்லை அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் தங்கபாண்டி என்பவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மேலச்செவலைச் சேர்ந்த சங்கர சுப்ரமணியம் என்பவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சரமாரியாக வெட்டி கொலைசெய்யப்பட்டார்.