திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த கணேசன் (46), பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் உள்ள தனது 45 செண்ட் இடத்தை மாநகராட்சி ஆக்கிரமித்து மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டியுள்ளதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி பல முறை தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுவரை எவ்வித இழப்பீடும் கிடைக்கப்பெறாத நிலையில் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்ற கணேசன், இன்று (நவ.30) மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு தகவலறிந்து விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல் துறை, தீயணைப்புத்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் தனக்கு நியாயம் கிடைக்கும் வரை கீழே இறங்க மாட்டேன் என்று கணேசன் கூறியுள்ளார். இதையடுத்து, தொடர்ந்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானப்படுத்திய பின்னரே கணேசன் கீழே இறங்கி வந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து தனக்கு இழப்பீடு வழங்கும் வரை போராடுவதைநிறுத்தப் போவதில்லை என சூளுரைத்த கணேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.