சென்னை: நெல்லை என்றவுடன், அனைவருக்கும் அல்வாவும் அருள்மிகு நெல்லையப்பர் கோயிலும் தான் நினைவுக்கு வரும். ஜனசந்தடியுடன் பரபரப்பாக இயங்கும் கீழ ரத வீதியில், கோயிலில் இருந்தும் இருட்டுக்கடை அல்வா கடையில் இருந்தும் சற்றே தள்ளி, பழமையின் சுவடு மாறாமல் நூற்றாண்டு கடந்து ஒரு பள்ளி. 1863-ல் ஆரம்பிக்கப்பட்டு, பொலிவு குன்றினாலும் இன்றளவும் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக, நெல்லைச் சீமையின் தொலைந்துபோன பக்கங்களின் சான்றாக நிமிர்ந்து நிற்கிறது.
நெல்லையும் அப்பர் கிளாப்டன் பள்ளியும்:இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர், நெல்லையில் தேவதாசிகளின் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிக்க "அப்பர் கிளாப்டன் (Upper Clapton) பள்ளி" தொடங்கப்பட்டது. தென் தமிழகத்தில், 'ஐரோப்பிய மிஷனரி' மகளிரால் பெண்களுக்கென உருவான 'முதல் கல்விக்கூடம்' இதுதான். அழகும் கம்பீரமும் மிக்க, ஆனால் ஒரு சிக்கலான வலைப்பின்னல் வடிவமைப்பிலான இந்த பள்ளி, மறக்கப்பட்ட வரலாற்றை தன்னகத்தே சுமந்து, நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரில், அந்த கால தேவதாசிகள் தெருவை அடுத்து அமைந்துள்ளது. இன்று அது ஒரு நடுநிலைப் பள்ளி!
பெண் குழந்தைகளின் கல்வியே நோக்கம்:இன்றைய நெல்லைவாசிகளுக்கு ஏபிஎம் தெரு என்றால் கோயிலுக்கு எதிரே உள்ள மார்வாடி தெரு என்றுதான் தெரியும். தேவதாசிகள் வாழ்ந்த அறம் வளர்த்த புற மாடத்தெருதான் APM தெரு என்று சுருங்கியது. மாட மாளிகை என இருந்த அந்த தெருவில் கைமாறாமல் இன்னும் எஞ்சியுள்ள வீடுகள் ஒரு சில மட்டுமே. அவையும் அதன் வாரிசுகளால் விரைவில் விற்பனைக்காக உள்ளன. இந்த தெருவுக்கு அடுத்து அமைந்துள்ளதுதான் 'ஐரோப்பிய மிஷனரி' மகளிரால் உருவான அப்பர் கிளாப்டன் பள்ளி. பெண்களுக்கான முதல் பள்ளி என்றாலும், இதன் அடிப்படை நோக்கம், 'தேவதாசிகளின் பெண் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத் தருவதே' ஆகும்.
பெண்ணடிமை தனத்தை உடைத்த வரலாறு:பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சாதிய இறுக்கமும், ஒடுக்குதலும், பெண்ணடிமைத்தனமும், நிலவுடமையும் கோலோச்சிய அந்த காலகட்டத்தில், இது ஒரு மிகப்பெரிய சவாலான ஒன்று. இதனை மிஷனரி மகளிர் (மறைபரப்பு பணியாளர்கள்) எதிர்கொண்ட வரலாறு வியப்பைத் தருவது. 1857 முதல் இந்திய சுதந்திரப் போருக்கு அடுத்த ஆண்டு வெளியான விக்டோரியா பேரரசியின் பிரகடனம், இந்தியர்களின் மத விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று ஆங்கிலேய அரசு உறுதியளித்தது. இதனால், காலனிய ஆட்சியின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டிருந்த சூழலில், இது சாத்தியமாகி இருக்கிறது.
லண்டன் to நெல்லை வந்த ஆன் சட்டன்: இந்த நிலையில், லண்டன் அப்பர் கிளாப்டனில் வாழ்ந்த ஆன் சட்டன் என்ற பெண்மணி, இந்தியா மற்றும் கிழக்கு ஆசியாவில் பெண்கள் முன்னேற்றத்திற்காக ஸெநானா குழு என்ற பெண்கள் அமைப்பை தோற்றுவிக்கிறார். ஸெநானா என்றால் பாரசீகத்தில் அந்தப்புரம் (அ) வீடுகளில் பெண்கள் பகுதி என்று பொருள். மிஷனரி பாதிரியார்களின் மனைவியர் மற்றும் தன்னார்வலர்கள், இதில் இணைந்து செயல்பட்டனர். இந்தியாவில், 1852-ல் வங்காளத்தில் கால் பதித்து, பின்னர் நெல்லைக்கு வருகிறார்கள். ஏன் நெல்லை?
தமிழகத்தில், சென்னையை அடுத்து நெல்லையே 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கிறிஸ்தவ மறைபரப்பு மற்றும் கல்வி-சமூக சேவையின் கேந்திரமாக விளங்கியது. மிஷனரிகளின் கல்வி பனியே, நெல்லைக்கு தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமையைத் தந்தது.
தேவதாசி முறை ஒழிக்க எடுத்த முதல் முயற்சி:“ஸெநானா குழுவினருக்கு, தேவதாசிகளின் வாழ்க்கை விசித்திரமானதாக தெரிந்தது. தேவரடியார்கள் என்ற அந்தஸ்து சரிந்து வீழ்ச்சியடைந்து தேவதாசிகள் ஆன அவலம், அவர்கள் பால் ஈர்த்தது. தேவதாசிகளின் ஆண்பிள்ளைகள் பெரும்பாலும் இசை, நாட்டியம் பயின்று நட்டுவனாராக ஆகிவிடுகின்றனர். பெண் பிள்ளைகள் நிலையோ பரிதாபம். செல்வந்தர் யாருக்காவது ஆசை நாயகியாக இல்லை என்றால், பாலியல் தொழில்தான். அறிவுக்கூர்மையும், சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை உள்ள இந்த பெண் குழந்தைகள், எழுத்தறிவு இல்லாமல் இருந்ததைக் கண்ட ஸெநானா குழுவினர் அவர்களுக்கு கல்வி அளிப்பதை, சமூக மாற்றத்திற்கான ஒரு சீர்திருத்த நடவடிக்கையாக மேற்கொண்டனர். அப்படி ஆன் சட்டன் நினைவாக உருவானதுதான் "அப்பர் க்ளாப்டன் பள்ளி" என்கிறார், ஆய்வாளரும் பதிப்பாளருமான லேனா குமார்.
கல்விக்கூடமே முதல் வழி:சரி பள்ளியை எங்கு கட்டுவது? நகருக்கு வெளியில் இருந்தால், வீடு, கோயில் என அடைந்து கிடக்கும் இப்பிள்ளைகள் எப்படி வருவார்கள்? எனவே, தேவதாசி தெருவை அடுத்த தெருவிலேயே பள்ளி உருவானது. ஸெநானா குழுவின் எமிலி லீவிஸ் அம்மையாரும் பிறரும் பள்ளியைத் தொடங்கினர். குழந்தைகள், தங்கள் தெருவில் இருந்து யாருக்கும் தெரியாமல், எளிதாக, விரைவாக வரவும், வெளியேறவும் ஏற்றவகையில், பள்ளிக்கு 5 வாயில்கள் இருந்தது. ஒரு வகுப்பில் இருந்து மற்ற வகுப்பிற்கும், மேல்மாடி வகுப்புகளுக்கும் நூல் பிடித்ததுபோல வழியும், எதிர்பாராத தாக்குதல் நடந்தால் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க ஒரு இரகசிய அறையும் அதன் சிறப்பு அமைப்பு.