தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கிய வழக்கில் 8 பேர் கைது! - சாதி கலவரம்

திருநெல்வேலி: இருசக்கர வாகனத்தில் வந்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் காவல் துறையினர் எட்டு பேரைக் கைதுசெய்தனர்.

நெல்லையில் மாற்று சாதியினரை தாக்கிய வழக்கில் 8 பேர் கைது!
Thirunelveli caste problem

By

Published : Jul 30, 2020, 4:14 AM IST

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் தச்சநல்லூர் காவல் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதற்குப் பயந்து அருகில் உள்ள சத்திரம் புதுக்குளம் தெரு வழியாக மூவரும் சென்றுள்ளனர்.

அந்த இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட சமுதாய தலைவரின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் சத்திரம் புதுக்குளம் பகுதியில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து மூன்று நபர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இருசக்கர வாகனத்தைப் பறித்துவிட்டு அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மூன்று நபர்களும் அளித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் காவல் துறையினர் நேற்று நள்ளிரவு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக சத்திரம் புதுக்குளம் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் என்பவர் வீட்டில் இளைஞர்கள் பதுங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து, வீட்டிற்குள் புகுந்த காவல் துறையினர் அங்கிருந்த எட்டு பேரைக் கைதுசெய்தனர்.

இதற்கிடையில் காவல் துறையினர் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக கண்ணபிரான் இன்று காலை பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவரது ஆதரவாளர்கள், அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் அவரது வீட்டு முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், பாதுகாப்பிற்காக அந்தப் பகுதி முழுதும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணபிரான், அவரது ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையில் இந்த வழக்கில் சம்பந்தமில்லாதவர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதாக கண்ணபிரான் தெரிவித்துள்ளார். பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நேற்று இரவு 2 மணியளவில் சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, என்னுடன் இருந்த நபர்களைக் கைதுசெய்து விட்டு, வீட்டிலிருந்த பொருள்களைச் சேதப்படுத்தினர். இந்த விவகாரம் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

மூன்று தினங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சுற்றியுள்ளனர். எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களை அடித்து விரட்டியுள்ளனர். அந்த வாகனத்தை நான்தான் காவல் துறையினரிடம் ஒப்படைத்தேன்.

ஆனால் என்ன நடந்தது, யார் தாக்கியது என்று எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் உண்மையாகவே சம்பந்தப்பட்ட நபர்களை நானே காவல் துறையிடம் ஒப்படைத்திருப்பேன். இது தெரியாமல் காவல் துறையினர் நேற்று என் வீட்டில் வந்து சாதி வன்மத்தோடு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தமில்லாத நபர்களையும் கைது செய்துள்ளனர். காக்கிச் சட்டை அணிந்துகொண்டு இதுபோன்று சாதிய உணர்வுடன் செயல்பட்டால் எவ்வாறு சமூக சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியும்.

எனவே இதுபோன்ற செயல்படும் காவல் துறையினர் மீதும், அலுவலர்கள் மீதும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் அமைப்பைச் சேர்ந்த மக்கள் வரும் தேர்தலில் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details