நெல்லை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழையும் சில நேரங்களில் கன மழையும் பெய்து வந்தது.
அந்த வகையில் இன்று அதிகாலை முதல் நெல்லையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக நெல்லை மாநகர் பகுதிகளான பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, நெல்லை டவுன், பேட்டை தச்சநல்லூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால், நெல்லை மாநகர் பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக வேலைக்குச் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி அதிகபட்சம் மணிமுத்தாறு பகுதியில் 39.40 மில்லி மீட்டர் மழையும், பாபநாசம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும், நெல்லை மாநகர் பகுதியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து சுமார் 4,000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் கடந்த மூன்று தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று, மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தற்போது அணைகளை பார்வையிட செல்கிறார். தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் செல்ஃபி எடுக்கவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஏற்கனவே எச்சரித்திருந்தார்.
கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் பொதுமக்கள் குளிப்பது துணி துவைப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் தொடர் மழை: படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தம்