திருநெல்வேலி:நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்று பெற்று தற்போது நடப்பு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சார்ந்த இவரின் தந்தை ஏ.எல். சுப்ரமணியன் இதே திருநெல்வேலி தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இந்தச் சூழலில் தொகுதி மக்கள் சார்பில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் ஈடிவி பாரத் சில கேள்விகளை முன்வைத்து நேர்காணல் மேற்கொண்டது. அதனை இப்போது காணலாம்.
இந்தத் தொகுதியில் நீங்கள் போட்டியிட காரணம் என்ன? எதற்காக இந்தத் தொகுதியை தேர்ந்தெடுத்தீர்கள்?
நான் தொடர்ந்து மூன்றாவது முறை இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவன் என்பதால் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறேன்.
தொகுதியின் முக்கியப் பிரச்னையாக எதைப் பார்க்கிறீர்கள்?
வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் தான் இத்தொகுதியில் முக்கியப் பிரச்னை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இங்கு சாதிக் கலவரத்தை ஒழிக்க ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைத்து தொழிற்சாலைகளை அமைக்க ஏற்பாடு செய்தார். அதன்படி சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் வரவில்லை. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல், சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. அதேபோல் கருணாநிதி கொண்டுவந்த ஐடி பூங்காவும் செயல்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.
மானூர், பள்ளமடை என இரண்டு பெரிய குளங்கள் இங்குள்ளன. தாமிரபரணி ஆற்றின் மிகை நீரைக் கொண்டு வந்தால் இரண்டு குளங்களும் நிறைந்து செழிப்பான விவசாயம் நடைபெறும் .ஆனால் அந்த நீரை கொண்டுவர அரசு எந்தத் திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால் மழைக்காலங்களில் குளங்கள் நிரம்புவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே இந்தக் குளம் நிரம்பியுள்ளது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக இரண்டு முறை குரலெழுப்பியும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தொகுதியில் நீங்கள் வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களின் செயல் திட்டம் என்னவாக இருக்கும்?