தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் தமிழ்நாடு அழிந்துவிடும்!'  - நெல்லை கண்ணன் - திமுக தலைமையிலான கூட்டணி

திருநெல்வேலி: எதிர்வரும் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்றால், தமிழ்நாடு அழிந்துவிடும் என காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் நெல்லை கண்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

By

Published : Apr 4, 2021, 1:09 PM IST

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஏ.எல்.எஸ். லட்சுமணனை ஆதரித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நெல்லை பேட்டை மல்லிமார் தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் பாளை ரபீக், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் நெல்லை கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நெல்லை கண்ணன் பேசுகையில், "சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவிற்கு மட்டுமல்ல; ஜெயலலிதாவிற்கும் துரோகம் இழைத்துள்ளார். உழவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் வேட்புமனு தாக்கலின்போது உழவன் என்று தன்னைக் குறிப்பிடவில்லை.

இதுமட்டுமல்ல பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமைகளுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல், வெட்கம் இல்லாமல் அதிமுவினர் மக்களிடம் ஓட்டுக்கேட்டு வருகிறார்கள்.

இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்றால் தமிழ்நாடு அழிந்துவிடும். ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டப்பேரவை உறுப்பினர்களைத் திருடி மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நெல்லை கண்ணன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளதாக மோடி கூறுகிறார். தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்த சைவ சித்தாந்த பாடப்பிரிவுகளை நீக்கிவிட்டு, இட ஒதுக்கீட்டை கூறி ஏமாற்றுகிறார்.

அதிமுக அமைச்சர்களால் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. அனைவரின் ஊழல் கோப்புகளும் பாஜகவின் கைகளில் உள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை என்பது நியாயமற்றது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெறும், வாக்கு எண்ணிக்கைக்கு 40 நாள்கள் உள்ளன. எனவே திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும்.

பாஜகவினர் எதையும் செய்வார்கள். அஞ்சல் வாக்கு போடுபவர்களையும் ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள், அனைத்தையும் முறியடித்து திமுக கூட்டணி வெற்றிபெறும்" என்றார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் கரிசல் சுரேஷ் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:தந்தைக்கு நடனமாடி வாக்குச் சேகரித்த அக்சரா, சுஹாசினி

ABOUT THE AUTHOR

...view details