நடிகர் விவேக்கின் உறவினரும் நடிகருமான மருதுபாண்டியன் ஈடிவி பாரத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், " 'மேல் மாடி காலி' என்ற நாடகத்தின் மூலம் தான் விவேக் சார் எனக்கு அறிமுகமானார். நான் அப்போது ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தேன். பின்னர் அவருடன் 15 படங்களில் இணைந்து நடித்து உள்ளேன்.
நான் விவேக் சாருடன் நடிப்பதற்கு முன்பே 50 படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அப்போது கூட எனக்கு நடிகன் என்ற ஒரு உணர்வு இருந்ததில்லை. விவேக்குடன் நடித்த பிறகு எனது நண்பர்கள் உறவினர்கள் என்னை அழைத்துப் பேசினார்கள். அதன் பிறகு தான் நடிகன் என்ற ஒரு அந்தஸ்து எனக்கு கிடைத்தது. அதற்கு முழுகாரணம் விவேக் சார் தான்.
நான் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற போது பணிஓய்வு நிகழ்ச்சியில் நடிகர் விவேக் பங்கேற்றார். 2019 ஆம் ஆண்டு எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது, என்னை அழைத்து 'கவலைப்படாதீங்க உடல் சரியாகிவிடும், இனிமேல் அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டாம்' என்று எனது உடல் மீது அக்கறை காட்டினார், அந்தளவுக்கு என் மீது பாசம் வைத்திருந்தார்.
கரோனா காலத்தில் கூட நிறைய பேருக்கு நடிகர் விவேக் உதவியுள்ளார். அவரது இறப்பை கேள்விப்பட்டு மிகுந்த வருத்தப்பட்டேன் அவர் இழப்பு என் தாய் தந்தையை இழந்தது போல் உணர்கிறேன். அந்தளவுக்கு நான் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று கண்ணீர் விட்டு அழுதார். யார் சென்று அவரிடம் உதவி கேட்டாலும் உடனடியாக வாய்ப்பு கொடுப்பார், அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவர்" என்று உருக்கமாகக் கூறினார்.
இதையும் படிங்க:விவேக்கின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்