திருநெல்வேலி: நெல்லை தர்காவில், கணவரால், இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், இம்ரான் கான்(34), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கும் நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சஜிதா பேகம்(25) என்பவருக்கும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்து ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் இம்ரான் கானின் மனைவி சஜிதா பேகம் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் மனைவி வீட்டுக்குச் சென்ற இம்ரான் கான் மனைவியுடன் பேசி ஒற்றுமையாக இருக்கலாம் என தெரிவித்து அவரை வெளியே அழைத்து வந்ததாகத் தெரிகிறது.
இம்ரான் கான் தனது இருசக்கர வாகனத்தில் அவரது மனைவியை அழைத்துக்கொண்டு டவுன் பகுதியில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் அமைந்துள்ள குளத்தங்கரை முகைதீன் மீரா சாகிபு தர்காவிற்கு வந்துள்ளார். அங்கு இருவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது கையில் இம்ரான் கான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி சஜிதா பேகத்தை சரமாரியாக குத்தி விட்டு, அங்கிருந்து சாதாரணமாக வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.