தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவிழா நடத்தக்கோரி நெல்லையப்பர் கோயிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டம்! - Tirunelveli news

கரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்ததை அடுத்து, திருவிழாவை நடத்தக்கோரி இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவிழா நடத்தக்கோரி நெல்லையப்பர் கோயிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டம்
திருவிழா நடத்தக்கோரி நெல்லையப்பர் கோயிலில் இந்து முன்னணியினர் உள்ளிருப்புப் போராட்டம்

By

Published : Oct 29, 2020, 8:53 PM IST

திருநெல்வேலி : நெல்லை டவுனில் அமைந்துள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இதையொட்டி பந்தல்கால் நடப்பட்டு கொடியேற்றப்பட்டு பத்து நாள்கள் சுவாமியின் திருவீதி உலா நடைபெறும்.

இந்நிலையில் கரோனோ நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறாது என நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடமிருந்தும் அனுமதி கிடைக்காததால், கோயில் உள்ளே வைத்து மிக எளிமையாக பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிற கோயில்கள், தேவாலயங்களில் வழக்கம்போல் திருவிழாக்கள் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, அதேபோல் நெல்லையப்பர் கோயிலிலும் ஐப்பசி திருக்கல்யாண விழாவை இந்த ஆண்டு நடத்த வேண்டும் என்றும், மக்கள் கூட்டத்தைக் கூட்டாமல் சுவாமியின் வீதி உலாவை மட்டும் எளிமையாக நடத்த வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ஆனால், கோயில் நிர்வாகம் அவர்களின் கோரிக்கையை ஏற்காத நிலையில், இன்று (அக்.29) இந்து முன்னணியின் மாநிலச் செயலர் குற்றாலநாதன் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பினர் 20க்கு மேற்பட்டோர் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அலுவலகத்தில் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கனர். அப்போது, கையில் தங்கள் அமைப்பின் கொடியை ஏந்தியபடி திருவிழா நடத்தக்கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார், இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுடன் பேசி சுமூக முடிவு அறிவிப்பதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதனை ஏற்று தற்காலிகமாக தங்களது போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

திருவிழா நடத்தக்கோரி நெல்லையப்பர் கோயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய இந்து முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர்

தொடர்ந்து, இதுகுறித்துப் பேசிய இந்து முன்னணி மாநிலச் செயலர் குற்றாலநாதன், ”நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனோவை காரணம் காட்டி திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் மறுத்துள்ளது. ஏற்கனவே இரண்டு திருவிழாக்கள் இங்கு நடைபெறவில்லை.

ஆனால் பிற கோயில்களில் வழக்கம்போல் அனைத்து விழாக்களும் நடத்தப்படுகின்றன. அலுவலர்களிடம் இது குறித்து கேட்டால் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதேசமயம் தேவாலயங்கள், மசூதிகளில் திருவிழாக்கள் வழக்கம்போல் நடைபெறுகின்றன. அங்கு மட்டும் தடை உத்தரவு அமலில் இல்லையா? இந்தத் திருவிழா நடைபெறாவிட்டால் நெல்லைக்கு ஆபத்து நேரிடும் என்று பக்தர்கள் எண்ணுகின்றனர்.

எனவே பக்தர்களின் கோரிக்கையை வலியுறுத்தி இன்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம். தற்போது காவல் ஆணையர் உரிய பதில் அளிப்பதாகக் கூறியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டுள்ளோம். திருவிழா நடத்தாவிட்டால் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details