திருநெல்வேலி: பாளையங்கோட்டை மறை மாவட்ட பொன்விழா நிறைவு கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசும் போது, "சனாதனம் என்பது இந்துக்களுக்கு எதிரானதாகும், நான்கு சதவீதம் பேர் மட்டுமே சனாதனம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மீதமுள்ள 96 சதவீதம் பேர் அடிமை வாழ்க்கை தான் வாழ்கின்றனர். இந்த நாட்டில் சமூக நீதிக்கு முதலில் வித்திட்டவர்கள் அருட்தந்தையர்கள் தான்.மணிப்பூரில் 300 தேவாலயங்கள் இடிக்கப்பட்டது. இயேசு சபை அனைவருக்கும் கல்வி கொடுப்பதால் தான் சனாதனம் அதைத் தடுக்கிறது. எனவே தான் தமிழகத்தில் முதல்வர் உட்பட அனைவரும் சனாதனத்தை எதிர்க்கின்றனர்" என்று தெர்வித்தார்.
ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்தைத் தொடர்ந்து சனாதனம் என்பது மத ரீதியாக இந்து மதம் சார்ந்தது என்றாலும் அதன் நடவடிக்கை இந்துக்களுக்கே எதிராக இருப்பதாகத் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சனாதனம் 4 சதவீதம் பேருக்கு மட்டுமே பயன்படுவதாகக் கூறிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
குறிப்பாக அப்பாவு சனாதனம் குறித்துப் பேசிய அதே நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். எனவே பாஜகவின் முக்கிய பிரமுகரை மேடையில் வைத்துக்கொண்டே சபாநாயகர் சனாதனம் குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.