தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திசையன்விளை அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு - வசமாக சிக்கிய மருத்துவர்கள்! - சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்

Minister Ma Subramanian: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சர் திடீர் ஆய்வு
அமைச்சர் திடீர் ஆய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 5:23 PM IST

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு - வசமாக சிக்கிய மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள்!

நெல்லை:நெல்லை மற்றும் நாகர்கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஆகஸ்ட் 27) நெல்லைக்கு வருகை தந்தார். பின்னர், நாகர்கோவில் செல்லும் வழியில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட சுகாதார அதிகாரிகளிடம் மருத்துவமனைக்கு செல்லும் வழியை கேட்டால் தனது திடீர் ஆய்வு குறித்து தகவல் வெளியே கசிந்துவிடும் என்பதற்காக, அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் வழி கேட்டு அமைச்சர் மருத்துவமனைக்கு சென்றதாக தெரிகிறது.

அமைச்சர் திடீரென வந்திருப்பதை கண்டு அங்கிருந்த செவிலியர் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்த அமைச்சர், அங்கிருந்த செவிலியரிடம் தற்போது எத்தனை மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள்? என்று கேட்டார். அப்போது, பணி நேரத்தில் மருத்துவர்கள் யாரும் பணிக்கு வரவில்லை என தெரிய வந்தது.

அதன் பிறகு, சுகாதார நிலையத்தில் இருந்த வருகைப் பதிவேடு மற்றும் சில நிர்வாக ஆவணங்களை அமைச்சர் ஆய்வு செய்தார். அதில், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, பணியில் இல்லாத மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் உரிய பாதுகாப்பு இல்லாமல் மருந்து பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, செவிலியரிடம் விசாரித்தார். அப்போது, நடமாடும் மருத்துவமனை வாகனத்தின் ஓட்டுநர் பணிக்கு வராததால், மருந்துகள் அவ்வாறு பாதுகாப்பில்லாமல் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அலட்சியமாக செயல்பட்ட வாகன ஓட்டுநர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நாய்க்கடி மற்றும் பாம்புக்கடி மருந்துகள் கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அறிந்து பயன்படுத்தும் வகையில், மருந்து இருப்பு குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: 4 வயது சிறுவன் உயிரிழப்பு; அண்ணா சதுக்கம் நீச்சல்குளம் திடீர் மூடல்!

ABOUT THE AUTHOR

...view details