தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜிபிஎஸ் கண்காணிப்பை விட்டு வெளியேறிய அரிக்கொம்பன்..? நெல்லை மலைவாழ் மக்கள் பீதி - Nellai People panicking

நெல்லை வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் ஜிபிஎஸ் கருவி கண்காணிப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் மலைவாழ் மக்கள் பீதி அடைந்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 8, 2023, 10:55 PM IST

Updated : Jun 9, 2023, 12:54 PM IST

ஜிபிஎஸ் கண்காணிப்பு வளையத்தை விட்டு வெளியேறியதா அரிக்கொம்பன் யானையால் மலைவாழ் மக்கள் பீதி

நெல்லை: தேனி மாவட்டம், கம்பம் நகர் பகுதியில் புகுந்த அரிக்கொம்பன் (Arikomban) என்ற காட்டு யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. மேலும், இந்த அரிக்கொம்பன் யானை தாக்கியதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து, அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகள் களமிறக்கப்பட்ட நிலையில், வனத்துறையினர் அரிக்கொம்பன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

பின்னர், அரிக்கொம்பன் சாலை மார்க்கமாக பலத்த பாதுகாப்போடு நெல்லை வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. நெல்லை மேற்கு தொடர்ச்சி மலையில் மணிமுத்தாறு அணை, மாஞ்சோலை தேயிலை தோட்டம் வழியாக கோதையாறு அணைக்கு அருகே குட்டியாறு டேம் என்ற பகுதியில் கடந்த 5ஆம் தேதி இரவு அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் கொண்டு வந்துவிட்டனர்.

முத்துக்குழி வயல் அருகே உள்ள குட்டியாறு அணைப்பகுதி பசுமை நிறைந்த மனிதர்களால் துண்டாடப்படாத காடு என்பதால் அங்கு யானை பத்திரமாக வாழும் என கணித்தனர். இதைத்தொடர்ந்து, அணைக்கட்டு நீரில் இறங்கி குளித்த அரிக்கொம்பன் இரு தினங்களாக அப்பகுதியில் முகாமிட்டிருந்தது. ஆபத்து மிகுந்த யானை என்பதால் ஏற்கனவே, யானையின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

எனவே, அதை வைத்து யானையின் இருப்பிடத்தை அவ்வபோது கண்காணித்து வந்தனர். குறிப்பாக, யானை காட்டிலிருந்து கீழே இறங்கி வந்தால் ஜிபிஎஸ் கருவி மூலம் அதன் வழித்தடத்தை அறிந்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் அளவில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்றிரவில் இருந்து ஜிபிஎஸ் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானையை கண்காணித்து வருகின்றனர்.

கோதையாறு அணைக்கு அருகில் நாலுமுக்கு மாஞ்சோலை பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். எனவே, முன்னெச்சரிக்கையாக நாலுமுக்கு உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது குறித்து வனத்துறையினர் தரப்பில் கூறுகையில், ”அரிக்கொம்பன் நல்ல நிலையில் உள்ளது. நேற்று இரவு அணைப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளது. அப்பகுதியில் தான் நிற்கிறது. மதியவேளை என்பதால் ஜிபிஎஸ் தொடர்பு கிடைக்கவில்லை. நாலுமுக்கு பகுதிக்கு வர வாய்ப்பில்லை, முன்னெச்சரிக்கையாக வனத்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.

இருப்பினும் ஆட்கொல்லி யானையாக கருதப்படும் அரிக்கொம்பனை, நெல்லைக்கு அழைத்து வர வனப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற சூழ்நிலையில் யானை தொடர்புக்கு வெளியே போன தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், எந்நேரமும் யானை கீழே இறங்கி வரலாம் என்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

இதையும் படிங்க: ’கிளீன் அண்ட் நீட்’.. புல்லை கழுவி உண்ணும் அரிக்கொம்பன்

Last Updated : Jun 9, 2023, 12:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details