திருநெல்வேலி:பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். தொழிலதிபரான இவர், கை, கழுத்து முழுவதும் கிலோ கணக்கில் நகைகள் அணிந்து நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமானவர்.
குறிப்பாக, நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க செய்தவர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வங்கியில் பல லட்சம் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் அம்மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஹரி நாடார் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருந்தபடி தனது வழக்கறிஞர் மூலம் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ஹரி நாடார் பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், "நான் கடந்த மே மாதம் முதல் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருகிறேன். எனது மனைவி ஷாலினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மனைவி பொய்புகார்
நான் சிறைக்கு வந்த நாள் முதல் இன்றுவரை என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க நான் சார்ந்த கட்சித் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் நான் வெளியே வராமல் தடுப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில்தான் மலேசியாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சு என்னை சிறையில் இருந்து வெளியே எடுக்க அனைத்து விதமான சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில் எனது மனைவி ஷாலினி உங்களிடம் அளித்துள்ள புகார் மனுவில், பெண் தொழிலதிபர் மஞ்சு என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி வைத்திருப்பதாகவும், நான் அவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் என்னை மஞ்சுவிடம் இருந்து மீட்டுத் தரும்படியும் கூறியிருப்பதை எனது வழக்கறிஞர் மூலம் அறிந்து கொண்டேன் எனது மனைவி அளித்த புகாரில் எந்த உண்மையும் இல்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை.
மலேசிய பெண் தொழிலதிபருடன் ஹரி நாடாருக்கு தொடர்பு?