நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் கழுத்து, கை விரல் என உடல் முழுவதும் கிலோ கணக்கில் நகை அணிந்து பிரபலமானார். சுமார் 4 கிலோ அளவுக்கு நகை அணிந்து கொண்டு, நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தார். மேலும் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் சேர்ந்து அரசியலிலும் கால் பதித்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 30,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தேர்தல் முடிந்த கையோடு மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஹரி நாடார் மீது அவரது மனைவி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், மலேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில் பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து ஹரி நாடாரை நீக்கம் செய்து ராக்கெட் ராஜா கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார். பிறகு அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால், ஹரி நாடாருக்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று(மார்ச்.31) ஹரி நாடார் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜமாலுதின் என்பவர் கொடுத்த மோசடி புகாரின் பேரில், நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார், ஹரி நாடாரை பரப்பன அக்ரஹார சிறையில் வைத்து கைது செய்தனர். இதற்கான ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைப்பட்டால் நெல்லை போலீசார் ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏஆர்டி நகைக்கடை மோசடி வழக்கில் பெண் கைது!